-->

Thursday 14 April 2011

கை கொடுக்குமா? கர வருஷம்



‘கர’என்றால் கை என்று அர்த்தம். இந்த ஆண்டு பிறக்கிற புதிய சித்திரைப்புத்தாண்டுக்கும் கர வருஷம் என்று பெயர்.  கை கொடுப்
பது என்பது இன்றைக்கு நமக்கு ஐரோப்பிய நாகரீக வருகையால் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிற- உறவை வெளிக்காட்டுகிற ஒரு கலாச்
சாரமாக இருக்கிறது.

ஆனாலும் நம் பாரம்பரியத்தில் கை கொடுத்தல் என்பது கை கொடுத்து ஒருவனுக்கு ஒருவன் உதவி செய்வதையே குறித்து நின்றது. ஆகவே தான், நம்பிய ஒருவன் உதவி செய்ய மறுக்கிற போது ‘அவன் கை விட்டு விட்டான்’ என்றும் ‘கை கழுவி விட்டான்’ என்றும் கூட சொல்கிறோம்.


ஆக, கை என்பது உழைப்பின் சின்னமாக, ஒருவரை ஒருவர் நேசிக்கும் உறவாடலின் அடையாளமாக, ஒருவருக்கு ஒருவர் உதவுதலின் அடிப்படையாக, இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே, இப்புதிய ஆண்டின் பெயரும் கரவருஷம் என்று வந்திருப்பது இவ்வகையில் மகிழ்ச்சி தருகிறது. இதனூடே வருஷங்களின் பெயர்களை வைத்து அதன் இயல்பறியலாம் என்று கருதுவதற்கில்லை. நாம் இதற்கு முன்பே விரோதியையும் சர்வஜித்தையும் பார்த்திருக்கிறோம். இன்னும் பார்த்திப- தாரண என்று 60 பெயர்களையும் அறிந்திருக்கிறோம். 60 வயதைக் கடந்தவர்கள் அந்த 60 வருடத்திலும் கூட வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும், இப்பெயரை முன்னிட்டுக் கொண்டு புதிய ஆண்டில் நல்ல வகையில் சிந்திப்பது நல்லது தானே..வருடாவருடம் கலண்டர்கள் மாறுகின்றன. பஞ்சாங்கமும் மாறுகிறது. வயதும் மாறுகிறது. இது ஒரு அளவை. ஏன்றாலும் ஒன்றிலிருந்து விடுபட்டு ஒரு
புதியதுள் நுழைகிறோம் என்று நினைக்கிற போது நம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் அமைந்திருக்கிறது.

இப்போதெல்லாம் தையில் தமிழ் வருடம் பிறப்பதாகக் கூட சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்கள் விருப்பு. ஆனாலும் அவர்கள் கூட மறக்காமல் சித்திரைமுதல் நாளையும் கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு விடயமும் உண்டு. பன்னிரண்டு இராசிகள் நாம் சொல்கிறோம். அதில் மேஷராசியில் சூரியன் செல்லும் காலம் சித்திரை. இதுவே பஞ்சாங்கக் கணிப்ப் படி முதல் மாதம்.

மேஷம் என்ற வடசொல்லுக்கு ஆடு என்பது பொருள். ஆக, ஆடு என்பதே ஆண்டு என்பதாக வந்திருக்க வேண்டும் எனவே, சித்திரை தான் ஆண்டின் ஆரம்பம் என்றும் சிலர் சொல்லுவர்.

இது எவ்வாறாகிலும் சித்திரை வருஷத்தை அண்டியதாகத் தான் கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் (தெலுங்கு பேசும் மக்களுக்கும்) புதிய ஆண்டு பிறக்கிறது. கேரளாவில் மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒரே நாளே புத்தாண்டாக அமைகிறது.

இது போலவே உலகில் வேறு பல நாடுகளும் கூட இக்காலப்  பகுதியையே வருடாரம்பமாகக் கொள்கின்றன. இயற்கையும் கூட வசந்தம் பொங்க.. புத்துணர்வூட்டி நிற்கும் காலம் இது.

கண்ணபிரான் ‘காலங்களில் வசந்தம்’ என்றான். அந்த வசந்தகாலத்தின் ஆரம்பமும் சித்திரைப்புத்தாண்டே. ஆக, இத்தகு இனிமை நிறை நாட்களை நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராவோம்.

மலரும் புதிய சித்திரைப்புத்தாண்டு நம்மெல்லோர் வாழ்விலும் புதிய மலர்ச்சியைத் தர இறைவனை வேண்டுவோம்.

‘வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்’
(ஓ… வள்ளி நாயகரே.. முருகப்பெருமானே.. என்னைக் கைகொடுத்துக் காப்பாற்றும்)
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்..
தி.மயூரகிரி சர்மா
யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment

 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.