-->

Thursday 4 November 2010

தித்திக்கும் இறைதரிசனம்

தீப ஒளித் திருநாளன்று தித்திக்கும் இறைதரிசனம்

அன்பிற்குரிய நேயர்களே.!

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்……
நேயர்பெருமக்களை நீர்வேலி ஆலயங்களுக்கு
தீபத்திருநாளினை ஒட்டி அழைத்துச்செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
அரசகேசரிப்பிள்ளையார் தரிசனம்

   ரகுவம்ச மஹாகாவ்யத்தைத் தமிழில் தந்த அரசகேசரி மன்னனால்
ஸ்தாபிக்கப்பட்ட  அரசகேசரிப் பிள்ளையாரின் பேரருளோடு அப்பெருமானின்
ராஜகோபுரத்தைத் தரிசித்து சென்ற காலத்தின் பழுதுகள் நீங்கவும் இருளகன்று
ஒளி பரவவும்; வழிபட்டுக்கொள்ளுவோம். கோவிலிலே ஆலய குருக்கள்
சா.சோமதேவக்குருக்கள் எங்களுக்காக பிள்ளையாருக்கு தீபாராதனை
சமர்ப்பிக்கிறார். தீப ஒளியில் தெரியும் பிள்ளையாரை தீபாவளியில்
தரிசிக்கின்றோம். ஆங்கு எழுந்தருளியிருக்கும் பாலாம்பிகை உடனாய
வைத்தீஸ்வர ஸ்வாமியின் தரிஸனமும் தீப ஒளியிடையே கண்டு வழிபடுகின்றோம்.

  விநாயகனே வௌ;வினையை வேரறுக்கவல்லான்
  விநாயகனே வேட்கை தணிவிப்பான்
  விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் -தன்மையினால்
  கண்மிற் பணிமின் கனிந்து

கந்தப்பெருமானின் அருளாட்சி

  ஸ்கந்த ஷஷ்டி மஹோற்சவம் நடைபெற தயாராகிக்; கொண்டிருக்கும்
கடம்பமரத்தை தலமரமாகக் கொண்ட  நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அடுத்ததாக
நாம் பயணிப்போம். ஆங்கே சேவற்கொடியுடையதாக ராஜகோபுரம் நெடிதுயர்ந்து
நம்மை வரவேற்கிறது. ஆறுமுகத்துடன் காட்சி தரும் பெருமானுக்கு
இ.ஸ்வாமிநாதக்குருக்கள் செய்யும் பஞ்சாரார்த்தி ஆராதனையை பார்த்து
“அரோஹரா” என்று மகிழ்கிறோம்.
   உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
   மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
   கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
   குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
             என்கிற கந்தரனுபூதிப்பாடலை பாடி சரணமடைகிறோம்.

பழநியாண்டவர் தருகிறார் பலநலம்

புழநிமலை போன்ற அமைப்பிலுள்ள பழநியாண்டவர் சந்நதியையும் பார்த்து
வழிபடுகிறோம். நம்மீது கொண்ட அன்பினால் எல்லாவற்றையும் எமக்கு அள்ளித்
தந்து விட்டு தான் ஆண்டியாக நிற்கும் அந்த அழகனை பார்த்தால் மனம் அவனை
அள்ளி அணைக்க விரும்புகிறது.

ஆடும் தெய்வம் நம்மை ஆளும் தெய்வம்

   அதெல்லாம் சரி சிவபெருமானையும் அம்பாளையும் தரிசிக்க வேண்டாமோ?
நீர்வைக் கந்தன் ஆலயத்திலேயே அருள் நடனமாடும் சிவகாமியம்பாள் சமேத
நடராஜப் பெருமானையும் தட்சணாமூர்த்தியையும் தரிசிக்கிறோம்.

  சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
  சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
  சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
 சிவ சிவ என்றிட சிவகதி தானே


நீர்வேலியில் கதிர்காம இறைவன்

     இயற்கை எழில் கொஞ்சும் நீர்வேலியிலுள்ள கதிர்காம ஸ்தலத்திற்குச்
செல்கிறோம். ஆலய அமைப்பை நயந்தவாறு குமாரபுஷ்கரணியில் நீராடி உள்ளே
சென்று ஆறுமுகக் கடவுளையும் ஒருமுகத்துடன் எழிலோடு வீற்றிருக்கும்
முத்துக்குமார சுவாமியையும் தரிசிக்கிறோம். ஆலய குருக்கள் நீர்வைமணி
கு.தியாகராஜக்குருக்கள் செய்யும் பூஜையை பார்த்து பூரிக்கிறது
நம்முள்ளம்.

  ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
  மஹாமதிம் திவ்ய மயூரவாஹனம்
  ருத்ரஸ்ய ஸ_னும் ஸ_ரஸைன்ய நாதம்
  குஹம் ஸதா சரணமஹம் பிரபத்யே

                என்ற சமஸ்கிருத ஸ்லோகம் கேட்கிறது. என்ன பொருள்?
“செக்கச் சிவந்த வடிவழகனும் பேரறிவு படைத்தவனும் மயில்வாகனனும் சிவனார்
குமரனும் தேவர்களின் சேனைத்தலைவனும் அன்பர்களின் ஹிருத குகையில்
நீங்காதிருப்பவனும் ஆகிய ஆறுமுகனை தஞ்சம் என அடைகிறேன்.”
     எவ்வளவு அழகான பொருள். எவ்வளவு சிறப்பான வர்ணனை. சமஸ்கிருதம்
உண்மையிலே சிறப்பான அற்புத பாஷை தான்.

கோயிலில் ஐப்பசி வெள்ளியும் மறுநாள் கந்தஷஷ்டி உத்ஸவாரம்பமும் நடக்க
இருப்பதால் மக்கள் அதற்கு முன்னாயத்தங்களில் ஈடுபடுவதைக் காண
முடிகின்றது. ‘ஷஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும். இது சத்தியம்’ என்ற
வார்த்தைகளை மனத்தில் எண்ணி இறை தாள் பணிகின்றோம்.


தீபாவளிப் பண்டிகை தந்த கோவிந்தன்- கண்ணன்

 நரகாசூரனை அழித்து நல்லவர்களை மகிழ்வித்து நரகசதுர்த்தசியும் தீப
ஒளித்திருநாளும் கொடுத்த திறம் கொண்ட எங்கள் கண்ணனை கும்பிடவில்லையே என்ற
ஏக்கம் இருக்கிறதா? அது தான் கண்ணன் கதிர்காமகோவிலிலேயே குழந்தையாக
காட்சி தருகிறான். கள்ளன் எங்கள் மனங்கவர்ந்த கார் மேனி வண்ணன். ஆ….
கோவிந்தா… கோவிந்தா…. என்று எம்மையறியாமலேயே மனம் சொல்கிறது. அவனோ நம்மை
தன் கடைக்கண்ணால் பார்த்து ஒரு புன்னகையும் அளிக்கிறான். காமாட்சியம்பாள்
ஆலயத்திலும் கந்தனாலயத்திலும் அழகிய பூமி தேவி ஸ்ரீதேவி உடனாய மஹாவிஷ்ணு
திருவுருவை தரிசிக்க முடிவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது

பச்சை மாமலை போல் மேனிப் பவள வாய்க்கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

வாய்க்காற்தரவை வாழும் வள்ளல்

       நீர்வேலி சந்தியில் உள்ள வாய்க்காற்தரவை விநாயகர் ஆலயத்திற்கு
அடுத்து நாம் செல்கிறோம். பெரிய திருக்கோவில். பல பரிவார மூர்த்திகள்.
இருந்த போதும் விநாயகர்(தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர்)
மூலஸ்தானத்தில் சிறிய உருவத்தில் குட்டிப்பிள்ளையாராக காட்சி தந்தாலும்
இந்த குவலத்தையே வாழ்விக்கும் பிள்ளையாக கொடை வள்ளலாக பிள்ளையார்
வீற்றிருக்கிறார்.

 ‘கஜவக்த்ரம் ஸ_ரஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஜிதம்
 பாச அங்குச தரம் தேவம் வந்தேஹம் கணநாயகம்’

            என்ற மந்திரம் மனதில் நிழலாடகிறது. யானைமுகம் கொண்டவா.;
பாச அங்குசம் கைகளில் ஏந்தியவர். பெரிய காதுகளை உடையவர். உயிர்கள்
யாவற்றிற்கும் தலைவர். தேவர்களில் சிறந்தவர். அப்பேற்பட்டவரான பிள்ளையாரை
நான் வணங்குகிறேன்.


காளியை கும்பிட்டால் காலனும் நெருங்கான்

  நீர்வேலி வடக்கு காளியம்பாள் ஆலயத்திற்கு அடுத்துச் செல்கிறோம். அந்த
அம்மை நம்மிடம் யமன் வரக்கூட விடமாட்டாள். நமக்கு அவளருகிலிருந்தால் எந்த
பிரச்சினையும் வாரா… வசந்த மண்டபத்தில் தீபாராதனை நடக்கிறது. பார்த்து
அவள் பதம் பணிகிறோம். கேதாரகௌரி விரத நிறைவை முன்னிட்டு ஏராளமான
அடியவர்கள் பூவும் நீரும் கொண்டு கேதாரநாதரைவழிபடும் கௌரியன்னையைச்
சுற்றி வந்து பூசிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

கருணையின் நிலையம் காமாட்சியம்பாள்

     நீர்வேலி- சுன்னாகம் குறுக்கு வீதியில் உள்ள காமாட்சியம்பாளுடைய
தரிசனமும் மனதிற்கு மகிழ்வைத் தருகிறது. அம்பாளுடைய திருவூஞ்சல் சேவையை
சேவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டுகிறது.கிரி சர்மாவும் அவர்
தந்தையும் அன்னைக்கு தீபாராதனை செய்கிற காட்சியையும் காண்கிறோம்.

 வேல் கொடுத்தாய் ;செந்தில் வேந்தனுக்கு கண்ணிழந்த வன்தொண்டனுக்கு
 கோல் கொடுத்தாய் காலன் தொடா நீளாயுள் கொடுத்தாய் மார்க்கண்டனுக்கு;-
பால்
 ;  கொடுத்தாய் ஞானசம்பந்தனுக்கு பேர் கொடுத்தாய் விவேகானந்தனுக்கு
 பேடுடைய நீர்வை காமாட்சியே என் கொடுத்தாளுவாய் என்னையே   (தி.ம)

இத்திருக்கோயிலில் தான் யாழ்ப்பாணத்திலேயே அர்த்தநாரீஸ்வரருக்கு
தனித்திருவுருவம் அமைந்திருக்கிறது. தீபாவளியில் அம்மூர்த்திக்கு
கேதாரகௌரிவிரதத்தை முன்னிட்டு ஸ்ரீ ருத்ராபிஷேகம் நடக்கிற காட்சியும்
மகிழ்வைத்தருகின்றது. பிரிவினைகள் நீங்க வேண்டும். இரண்டுகளாகிக்
கிடக்கும் எல்லாமும் ஒன்றாக வேண்டும். ஏன்று பிரார்த்திக்கின்றோம்.

அதர்மத்தை அழிக்கும் வீரபத்திரஸ்வாமி

       இறைமறுப்புக் கோட்பாட்டுடன் வேள்வி செய்த தக்கனை வேரோடறுத்த
வீரபத்திரர் நீர்வேலி தெற்கில் ஆலும் அரசும் நிறைந்த அமைதியான இயற்கை
சூழலில் காட்சி கொடுக்கிறார். செய்த பாவங்கள் தொலைய நாமும் அவரை
மன்றாடுகிறோம்.

மீன் போலும் கண்ணுடை அம்மை

         மீன் இருக்கிறதே அது தன் முட்டைகளை எல்லாம் தன் கண்
பார்வையாலேயே குஞசுகளாக்கி வளர்க்குமாம். இவ்வாறு தன்னை வணங்கும்
பக்தர்களை தன் பார்வையாலேயே வளர்க்கக் கூடியவளான மீனாட்சியம்மை
நீர்வேலியில் மாசுவனில் கோயில் கொண்டிருக்கிறாள். அவள் பாதங்களைத் தொட்டு
இதயத்தில் பதித்துக்கொள்கிறோம்.

ராஜராஜேஸ்வரி அம்பாள்

         கேதார கௌரி விரதமும் தீபாவளியுடன் இணைந்து வரும் வருடங்கள்
சில உண்டு. இவ்வாண்டும் அப்படியே வருதலால் ஏராளமான பெண்ணடியார்கள்
இத்தீபாவளியில் நீர்வை இராஜராஜேஸ்வரியையும் வணங்கி அங்கே சிவலிங்கபூஜை
செய்யக் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மகிழ்ச்சிகரமாக அங்கே தீப
ஒளித்தரிசனம் செய்கிறோம்.

முருகையனின் மகத்தான காட்சி

அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று வர்ண மயமாக அழகுற விளங்குவதே
‘கந்தபுராண கொட்டகை’ என்று போற்றப்பெறும் முருகையன் கோயில். கோயிலின்
உள்ளே வெற்றி வேலின் காட்சி. வேல் என்பது வெற்றியே தருவது. ஆழ்ந்து
அகன்று நுண்ணியதாய் சான்றாண்மையின் வடிவமாகக் காட்சி தரும் வேலில்
விளங்கும் சுகந்த சந்தனமும் கூட தீபத்தின் ஒளியில் பிரகாசிக்கிறது.

பைரவர் கோவில்கள்

   அடியெடுத்து வைக்குமிடமெல்லாம் மரநிழல்களிலும் சிற்றாலயங்களிலும்
பைரவப்பெருமானை நீர்வை எங்கும் காணலாம். அவ்வாறு விட்டு விட்டாலும்
பைரவர் சந்நதியில்லாத பெரிய கோயில்கள் இல்லை. இவ்வளவு அனர்த்தங்கள்…
இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் இன்னமும் சிறப்பாக நீர்வையில் மக்கள்
வாழுவதற்கு பைரவமூர்த்தங்களின் காவல் தான் காரணமோ?

சப்தகன்னியர் ஆலயம்

   ஏழு உருத்தாங்கி எழுந்த அசுரர்களை எல்லாம் அழித்த ஆதிபராசக்தியின்
ஏழு வடிவங்களுக்கும் நீர்வை மக்கள் தனிக்கோவில் சமைத்து வயல் வெளியிலுள்ள
மிகப்பெரிய ஆலமரங்களுக்கு நடுவே வழிபடுகின்றனர். பிராம்மி மாஹேஸ்வரி
கௌமாரி வைஷ்ணவி வாராஹி இந்திராணி சாமுண்டி என்ற பெயர்களால் போற்றப்படும்
இவ்வம்மையருக்கு வைகாசிமாதத்தில் பத்து நாட்களுக்கு பெருந்திருவிழாவும்
செய்கிறார்கள்.

      ஊரின் எல்லையில் குடிஜன நடமாட்டம் குறைந்த இயற்கைச் சூழலில்
அமைவு பெற்றுள்ளது இவ்வாலயம்.

 இது வரை இவ்வாறு சப்தமாதரும் மூலஸ்தானத்தில் கருங்கல் உருவாக எழுந்தருளி
தனித்திருக்கோவிலில் அருளாட்சி செய்யும் வேறு ஆலயம் இலங்கையில்
இருப்பதாகவே தெரியவில்லை. இத்தகு தனித்துவமான ஸ்தலத்தை மனக்கண்ணில்
நிறுத்தி வழிபடுகிறோம்.

             இப்படி எத்தனையோ தலங்கள் நீர்வைப்புண்ணிய பூமியில்….
அத்தனை தெய்வங்களும் நம்மை நல்வழியில் இட்டுச்
செல்லப்பிரார்த்திக்கிறோம்.
ஏத்தனையோ மஹான்கள் இந்த உலகில் அத்தனை பேருக்கும் எமது வணக்கங்கள்…..


சமூகசேவை நிலையங்களையும் கல்லூரிகளையும் கூட ஒருமுறை கவனிப்போம்

  நீர்வேலியிலுள்ள கல்லூரிகளையும் சமூகசேவை நிலையங்களையும் கூட இன்றைய
நாளில் ஒரு முறையேனும் மனக்கண்ணில் நிறுத்தி நம்மால் செய்யக்கூடியவற்றை
செய்வதும் இறை தொண்டேயாகும்.

எல்லோருக்கும் மீண்டும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்……

விவரணச் சித்திரம்-
நீர்வை.தி.மயூரகிரிசர்மா

3 comments:

arasakesarippillayar said...

உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகின்றன... அவை களத்தில் எழுதுபவர்களை மேலும் எழுதத்தூண்டும்...
ஆகவே நீங்களும் தூண்டிவிட்டுப்போகலாம்...

விபரன் said...

நமதூரின் ஆலயங்கள் தொன்மையாகவும் சிறப்பாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தாலும், ஆலயத்திற்கு அள்ளிக்கொடுக்க நினைக்கும் நம்மவர் தமது கவனத்தை முற்று முழுதாக சமூகத்தின் பக்கம் திருப்புமளவிற்கு மூடத்தனமொழிந்த பக்குவம் வளற்கப்பட வேண்டிய கட்டாயமுள்ளது, அல்லது கிராம முன்னேற்றம் நாடும் ஒரு செயற்றிறன் மிக்க குழு ஒன்று ஆலயத்தின் நிர்வாகங்களுடன் இணைந்து வெள்ளை-சிவப்பு வர்ணத்திற்கு செலவிடும் பணத்தினை கல்வி,கலை போன்றவற்றை முன்னேற்றவும் ஊக்குவிக்கவும் திசை திருப்பப்பட வேண்டும் என்கிற சிந்தனை செயலாகும் போது நிச்சயம் ஊரின் பெருமை கோபுரங்களிலும் விட உயர்வாக இருக்கும் நிறைவாகவும் இருக்கும்.

arasakesarippillayar said...

காத்திரமாண கருத்துக்கள் வரவேற்கிறோம்....
நன்றி விபரன் அவர்களே....

Post a Comment

 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.