-->

Sunday, 13 March 2011

நீர்-வில் தான் நீர்வேலியானதா?

நீர்-வில் தான் நீர்வேலியானதா? ஒரு சிந்தனைக்குரிய ஆய்வு

இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் தர்மபத்தினியாகிய சீதாதேவியை மீட்கும் பொருட்டு, இராவணனுடன் யுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான வானரசேனையுடன் இலக்குவன், ஹநுமான் மற்றும் விபீஷணனின் துணையுடன் சேது பாலம் அமைத்து இலங்கைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு சேது பந்தம் அமைத்து இலங்கை வந்த ஸ்ரீ ராமரும் அவர் தம்சேனையும் இராவணனையும் அவனோடு கூடிய அசுர கூட்டத்தையும் துடைத்தழித்தனர். சீதாதேவி மீட்கப்பட்டாள்.மணக்கோல நாதனாக சீதா லஷ்மண ஹநுமான் ஸமேதராக யாழ்ப்பாண குடாநாட்டில் ஸ்ரீ ராமர் காலடி வைத்தார். அது தான் இன்று திருவடிநிலை என்று அழைக்கப்படுகிறது. வில்லூன்றி என்ற புண்ணிய பூமியும் அதற்கு ஆதாரமாகிறது. அவர் தம் சேனா வெள்ளமும் அவரைப் பின்தொடர்ந்தது.

விபீஷணனின் பிரதேசமாக- இயல்பாக ஆன்மீக எழுச்சியுடன் விளங்கிய வடபுலத்தில சில பகுதிகளினூடே அவர்களது பயணம் அமைந்தது. இந்த வழியில் தான் நீர்வேலி- சிறுப்பிட்டி- புத்தூர்ப் பகுதியை அடைந்த போது எல்லோருக்கும் தண்ணீர்த்தாகம் உண்டானது. அதன் படி தாகத்தை நீக்க நிலாவரையில் நீர்த்தேக்கத்தை உருவாக்கினார்.

ஏராளமான படைவீரர்களுக்கும் அந்த ஒரேயிடத்தில் நீர் கொடுக்க இயலவில்லை. மேலும் நீண்ட தூரத்திற்கு வீரர் தொகை அணி வகுத்து நின்றது. ஆகவே பொக்கணையிலும் நீர்க்கிணறு உருவாக்கப்பெற்றது. இது இப்பகுதியில் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் கதை..

அது சரி.. இன்னும் சிந்திப்போம்…

நீர்வேலியும் நீருக்குப் பெயர் பெற்றது. தான் தோன்றியாக அமைந்த கிணறு ஒன்று இங்கும் இருக்கிறது. அது தான் நீர்வேலி அரசகேசரிப் பெருமானின் திருமஞ்சன தீர்த்தமாக விளங்குகிறது.

சுமார் ஒரு இருபதடி ஆழம். நான்கடிக்கும் குறைவான சுற்றளவு.. இப்படியாக அந்தக் கிணறு இருப்பதைப் பார்க்கிற எவருமே அது மனிதர்கள் வெட்டியிருக்க இயலாத ஒன்று என்று கணிக்க முடியும்.

ஆக, இத்தான்தோன்றிக் கிணறு வில்லூன்றி வந்தது என்று ஒரு அபிப்ராயம் மக்கள் மத்தியில் இருக்கிறது. யாருடைய வில்?

யாருடைய வில்? ஏன்று கேட்டால் பதில் இல்லை. பிற்காலத்தில் கவியரசனாக யாழ்ப்பாணத்தரசில் முதலமைச்சனாக இருந்த அரசகேசரி தான் கண்ட கனவின் அடிப்படையில் இங்கு வந்து இத்தீர்த்தத்தை கண்டு அருகில் முன்னரே இருந்த சிற்றாலயத்தை புதுக்கி- பெருப்பித்து கும்பாபிஷேகம் செய்திருக்கிறான்.

அரசகேசரி பாடிய பெரிய காவியம் இரகுவம்சம். அது இராமருடைய வம்சத்தில் வந்த அரசர்களின் பெருமை கூறுவது. இராமரை- ஸ்ரீ இராமாயணத்தை உள்வாங்கி அதற்கு முன்னும் பின்னும் இருக்கிற அரசர்களின் பெருமைகளை எல்லாம் விரித்துரைப்பது.

மஹாகவி காளிதாசனால் சம்ஸ்கிருதத்தில் செய்யப்பெற்றதை அரசகேசரி தமிழில  கவிதைகளாகப் படைத்திருக்கிறான். ஆக, அரசகேசரியும் ஒரு பெரிய ராமபக்தன். இவன் இங்கே நீர்வேலிக்கு வந்து கோயில் எழுப்பியிருக்கிறான்.

மீண்டும் நீர்வேலியில் தான் தோன்றித் தீர்த்தம் அமையக் காரணம் யார்? ஏன்று கேட்டால்.. அது வில் ஊன்றி வந்தது என்றால்.. (அது அமைந்த முறைமையைப் பார்க்கிற போது இதையும் இன்றும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்) அது யாருடைய வில்? யாருடைய வில் இப்படி நிலத்தைத் துளைத்து நீரை எடுக்கும் ஆற்றல் மிக்கது?

ஒரே ஒருவன்.. வில்லுக்குப் பெயர் பெற்ற கோல வில்லி இராமன்.. ஸ்ரீ ராமனால் தான் இப்படி சாதிக்க இயலும்.. ஆக, இராமன் நீர்வேலிக்கு வந்தானா? பரம்பொருளான மஹாவிஷ்ணுவின் உயர் அவதாரமூர்த்தியான ஸ்ரீ ராமஸ்வாமி நீர்வேலியில் பாதம் பதித்தாரா? மிகவும் புதுமையான இத்தகவலை ஒட்டி இன்னும் சிந்திப்போம்…

(தொடரும்…)


ஆய்வு  :-நீர்வை.தி.மயூரகிரி சர்மா

0 comments:

Post a Comment

 

களத்தில்

எண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடுவார்த்தைகளாய்

கண்டிப்பாக

தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.